மே 2007

தன் மகள் கனிமொழிக்காக கருணாநிதி சட்டத்தை வளைத்து சென்னை சங்கமம் நடத்தியதாக ஜெயா டிவியில் சோவும் ஞாநியும் குற்றம் சாட்டியுள்ளார்களே?

ச.சொர்ணமுகி, கடலூர்.

“நான் நாத்திகன். எந்தக் கோயிலும் மக்களுக்கு தேவையில்லாதது. அதனால் வாங்க போய் மசூதியை இடிக்கலாம்’ என்று ஆர். எஸ்.எஸ்காரன் கூட சேர்ந்துக் கிட்டு மசூதியை இடிக்க முடியுமா? அப்படி இடிக்கிறவன் உண்மையிலேயே நாத்திகனா இருக்க முடியுமா?

அது போல் ஊழலை எதிர்க்கிறவங்க, ஜெயலலிதா கூட சேர்ந்துக்கிட்டு ஊழலை எதிர்க்கிறதா சொன்னா அவங்க யோக்கியதை எப்படிப் பட்டது, அப்படிங்கிறதை சொல்லவும் வேண்டுமா? இந்த ‘நேர்மை’யாளர்களான ஞாநியும், சோவும் தர்மபுரியில் பெண்களை எரித்துக் கொன்ற வழக்கில் தண்டனை அடைஞ்ச அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது இவர்களின் யோக்கியதைக்கான இன்னொரு சாட்சி.

8 மேற்கு வங்க அரசோடு ஒப்பிடும் போது தமிழக அரசு எவ்வளவோ பரவாயில்லை?

என்.சுரேஷ்குமார், ஈரோடு.

மேற்கு வங்க அரசோடு ஒப்பிட்டால் இந்தியாவின் எந்த மாநில அரசும் ஏன் கேரளா கூட இவ்வளவு மோசம் இல்லை. புத்ததேவ் பட்டாச்சாரியா, குஜராத் மோடியோடு போட்டி போடுறார்.

ஓட்டுக் கட்சிகளில் பி.ஜே.பிக்கு மாற்றாக சி.பி.எம். மை கருத்தளவில் சில நாட்கள் ஆதரிச்சிருக்கேன். அதை இப்ப நினைச்சா என் உடம்பெல்லாம் கூசுது.

‘தமிழ்நாடு பரவாயில்லை’ன்னு சொல்லியிருக்கீங்க… மேற்கு வங்காளத்திற்கு டாடா. தமிழ்நாட்டுக்கு ரிலையன்ஸ். விவசாயிகள், சிறு வியாபாரிகள் இவர்களுக்கு எதிரா ரிலையன்ஸ் நிறுவனவம் தமிழ்நாட்டில் வர்த்தக வன்முறையை துவங்கியிருக்கு.

தமிழக அரசு தனக்கு ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு ஆதரவா உழவர் சந்தையை நடத்துமா? இல்லை அம்பானிக்கு ஆதரவா ஆயுதம் தூக்குமா? பொருத்திருந்து பாருங்க.

வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் படத்துக்கு இளையராஜா இசைக்க மறுத்தாராமே?

க.டென்னீஷ், பெரியபாளையம்.

“நான் மறுக்கவில்லை” என்று இளையராஜா மறுத்திருக்கிறார். அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள். அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம். 99 சதவீதம் அவர் நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை “பாடறியேன்… படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா. சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியது தான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். உண்மையில் தியாகய்யர் சமாதி அடைந்தது அன்று தான்.

கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது. இளையராஜாவின் இந்தச் செயல், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு வார்த்தைகளை விடவும் படு பயங்கரமானது.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது அவாளுக்கு. “அதெப்படி பார்ப்பன உணர்வுள்ள பாலசந்தர் படத்தில் இதை செய்ய இளையராஜாவால் முடிந்தது?’ பார்ப்பன எதிர்பாளர் என்கிற உணர்வோ அப்படி ஒரு நிலையிலோ இருந்து அதை செய்யவில்லை இளையராஜா. “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

இளையராஜா உருவாக்கிய ஒரு மெட்டை மாற்றுகிற தைரியம் இதுவரை எந்த இயக்குனருக்கும் வந்ததில்லை. தமிழர்களின் இனிமை அவர்.

நிறைய சர்ச்சையாகியிருக்கிறதே, நீதிபதிகளுக்கு என்ன ஆயிற்று?

வி.பாண்டியன், கோவில்பட்டி.

ஒரு சிறந்த நீதிபதி, சட்டத்தின்படி மட்டும் இயங்க மாட்டார். ஏனென்றால் சில நேரங்களில் சட்டத்தின் படி சரியாக இருப்பது நியாயத்தின் படி , நீதியின் படி தவறாக இருக்கும். சட்டத்தின் படி, மட்டும் இயங்குபவர் தீர்ப்பு வழங்குபவராக மட்டும் தான் இருப்பார். நீதி வழங்குபவராக இருக்க மாட்டார். சட்டத்தின் துணையோடு நியாயப்படி, நீதியின் படி பரிவோடு, துணிவோடு தீர்ப்பு வழங்குபவருக்குப் பெயர் தான் நீதிபதி. சுருங்கச் சொன்னால் வி.ஆர். கிருஷ்ணய்யர் மாதிரி. “ரயில்வேயில் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது’ என்று தொடுக்கப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மரியாதைக்குரிய கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. ஓய்வு பெற்ற பிறகும் 90 வயதைத் தாண்டி நீதிக்காக ஓய்வில்லாமல் இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார் இந்த நீதிமான்.

பெ.சு.மணி, திருப்பூர் கிருஷ்ணன் போன்ற ஆய்வாளர்கள் பாரதியை பார்ப்பனராகப் பார்க்க முடியாது. அவர் சொந்த ஜாதியையே எதிர்த்தவர். அவரைப் போய்…?’ என்று உங்கள் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ நூலை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்களே?

சு. தமிழ்ச்செல்வி, சென்னை.

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னபோது, “கல் தோன்றா, மண் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. அதைப்போய் காட்டுமிராண்டி மொழி என்று சொல்கிறீர்களே?” என்று பெரியாரிடம் கேட்டார்களாம். அதற்கு பெரியார், ” நான் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கும் இதே தான் காரணம்” என்றாராம். அதுபோல் பாரதியை நாம் கடுமையாக விமர்சித்ததற்கு இப்படி பதட்டப்படுகிற இந்த திருப்பூர் கிருஷ்ணனும், பெ.சு.மணியுமே ஒரு வலுவான சாட்சிதான், பாரதி பார்ப்பன உணர்வாளர் என்பதற்கு.

பெரியாரும் திராவிட இயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா?

க.சுரேசு, கயத்தாறு.

பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.

திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.

பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.

1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.

மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.

புலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.

‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.

அதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி. (கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)

ஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.

இந்தியாவின் மிக சிறந்த அறிவு ஜீவி என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்?

நா.சுந்தரன்,கோவை.

டாக்டர் அம்பேத்கரை. இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்றுவரை இப்படி ஒரு அறிவாளியை இந்தியா கண்டதில்லை. அவரின் பார்ப்பன எதிர்ப்பு. இந்து மத எதிர்ப்பு இவைகளுக்காக மட்டும் சொல்லவில்லை. விஷயங்களை அவர் அலசி ஆராய்கிற முறை, அந்த தர்க்கம் அலாதியானது. உலகத் தரம் வாய்ந்தது. விவாதங்களில் எதிரிகளை மிகச் சரியாக கணித்து, மிகச் சிறப்பான தயாரிப்புகளோடு லாவகமான வார்த்தைகளால் அவர்களை தகர்த்தெறிகிற அம்பேத்கரின் முறை அழகோ அழகு.

பார்ப்பனப் பெண்கள் உட்பட இந்தியப் பெண்களுக்கு இன்று இந்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைத்திருக்கின்ற குறைந்தபட்ச பாதுகாப்பே அம்பேத்கர் போராடி பெற்று தந்தது தான்.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம்சம், ஒரு தார மணம், வன்கொடுமைகளுக்குத் தண்டனை இவைகளை சட்டமாக்க அவர் பட்ட சிரமமும், அவமானமும் அதிகம். அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பார்ப்பனர்கள், பண்ணையார்கள், பிரபுக்கள், ராஜாக்களிடையே அம்பேத்கர் பாய்ந்தும், பதுங்கியும் நடத்திய விவாதம் ஒரு ராஜ தந்திரம் தான். (நம்ம ஊர்ல இருந்து போன பட்டாபி சீதாராமய்யர், ஒ.வி.அளகேசன், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற ஜாதி வெறி பிடித்த, பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட லூசுகளும் அதில் உள்ளடக்கம்.)

அதேபோல் வட்டமேசை மாநாட்டில் அவர் தனிநபராக இருக்க, காந்தி உட்பட எதிரிகளை அம்பேத்கர் தன் வாதங்களால் தூக்கிப் போட்டு பந்தாடிய முறையை, படிக்க படிக்க பரவசமூட்டும். அது ஆயிரம் ஆண்டு கோபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றானாமே சிவன், அதை விட உயரம், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் விஸ்வரூபம்.

மத நல்லிணக்கம் பேசுகிறவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தான். நாஸ்திகர்கள் கூட இந்துகளில் மட்டும் தான் இருக்கிறார்கள். நாஸ்திகம் பேசுகிற பல முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தீவிரமான மத நம்பிக்கையாளராகத்தான் இருக்கிறார்கள். இந்துக்களின் ஒற்றுமையை குலைத்து விட்டு அவுங்க மட்டும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்களே?

வி. சௌமியா, காஞ்சிபுரம்.

“இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம்” என்று சொல்கிறார்கள். நாஸ்திகர்களும் அப்படி சொல்கிறார்கள். அப்படி சொல்வது தவறு. அது முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்தியர்களாகவே கணக்கில் வைத்துக் கொள்ளாமல் சொல்லப்படுகிற வாக்கியம். ‘இந்துக்களின் இருபெரும் இதிகாசங்கள்’ என்று தான் அவைகளைச் சொல்ல வேண்டும். அது தான் சரி.

அந்த இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் பாரதப் போர் வருகிறதல்லவா, அது என்ன பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்குமா நடந்தது? பங்காளித் தகராறு. அப்பவே இப்படி இருக்க, அப்புறம் இப்ப வந்து நீங்க இந்து ஒற்றுமையின்மைக்காக இஸ்லாமியரை குறை சொல்றது அநியாயம்.

இந்து மத வெறியர்கள் வேண்டுமென்றே இஸ்லாமியர்களை குறி வைத்துக் தாக்குவதால், இஸ்லாமிய ஒற்றுமை என்பது கட்டாயத் தேவையாய் இருக்கிறது. இஸ்லாமியர்கள் நெருங்கிப் பழக வந்தாலும் அவர்களை சுத்தம் அற்றவர்களாக, மட்டமானவர்களாக பார்க்கிற பழக்கம் ஜாதி இந்துக்களிடையே இருக்கிறது. அந்த சுயமரியாதை உணர்வின் பொருட்டே இஸ்லாமியர்களோடு மட்டும் பழக வேண்டிய அவசியம் இஸ்லாமியர்களுக்கு நேருகிறது. மற்றப்படி இஸ்லாமியர் என்பதற்காகவே ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு, மிகவும் திட்டமிட்டது. சன்னி, ஷியா முஸ்லிம்களிடையே நடக்கிற சண்டைகள் மதக்கலவரம் போல் தான் நடக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையின்மையினாலேயே ஈராக்கை அழித்து சதாமை தூக்கிலிட்டது அமெரிக்கா, இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா, மெதினா சவுதி அரேபியாவில் தான் இருக்கிறது. அந்த சவுதி அரேபியாதான் இஸ்லாமிய நாடுகளை அமெரிக்காவிற்குக் காட்டிக் கொடுக்கும் கருங்காலி வேலையைச் செய்கிறது.

மற்றப்படி நாஸ்திகர்களாக நடிப்பவர்கள் இந்துக்களிலும் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உணர்வை ஜாதி ரீதியாக வெளிப்படுத்துகிறார்கள். இந்து உணர்வு என்பது ஜாதி உணர்வுதானே. கடவுள் மறுப்பை, ஜாதி மறுப்பை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளாமையே. சில நேரங்களில் இந்தப் போலி நாஸ்திகர்களால் மதக் கலவரம் கூட வர வாய்ப்பிருக்கிறது.

ஜெயேந்திரரையே கைது செய்தவர் ஜெயலலிதா? அவரைப் போய் பார்ப்பன உணர்வாளர் என்கிறீர்களே (கடந்த இதழில்)

ஆர்.கணேசன், திருநெல்வேலி.

அது சரி. ஜெயேந்திரன், சங்கர்ராமன்னு ஒருத்தரை போட்டுத் தள்ளினாரே, அவர் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா? அவரும் அய்யிருதாங்க. அப்புறம் ஏன் இவுரு அவர போட்டாரு. அது மாதிரிதான் ஜெயலலிதா ஜெயேந்திரனை கைது பண்ணதும்.

விசிஷ்டாத் துவைதத்தைப் பரப்பிய ராமானுஜர், தன் இளமை காலத்தில் யாதவப் பிரகாசர் என்பவரிடம் வேதம் படிக்க சேர்ந்திருக்கிறார். “கப்யாசம்’ என்ற வார்த்தையை “கபிஆஸம்’ என்று அத்வைத முறைப்படி பிரித்து விளக்கம் சொல்லியிருக்கிறார் பிரகாசர். அதற்கு “குரங்கின் ஆசன வழி’ என்று அர்த்தமாம். குருவின் இந்த விளக்கத்தால் மனம் வருந்திய ராமானுஜர், கப்யாசம் என்ற வார்த்தையை “கம்பிபதிஇதிஆஸ’ எனப் பிரித்து அதற்கு “சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு மலர்ந்த செந்தாமரையைப் போன்ற கண்களுடைய திருமகள் நாதன் என்றும் விளக்கம் சொல்லியிருக்கிறார். இந்த விளக்கத்தால் அவமானப்பட்ட யாதவ பிரகாசர், ராமானுஜரை கட்டம் கட்டினார்.

தன் வேத அறிவால் பிரகாசரை ஓரங்கட்டி, காஞ்சியை ஆண்ட சிற்றரசனிடம் செல்வாக்கு பெற ஆரம்பித்தார் ராமானுஜர். ‘இனி பொறுப்பதில்லை’ என்று ராமானுஜருக்கு நாள் குறித்தார் யாதவ பிரகாசர்.

தன் சீடர்களோடு ராமானுஜரை ‘தீர்த்த மாடிவர’ கங்கைக்கு அழைத்துச் சென்று சீடர்களின் உதவியோடு ராமானுஜரை கங்கையில் அமுக்கி கொல்வது என்று திட்டம். கொலைத் திட்டம் ராமானுஜருக்கும் தெரியவர, ராமானுஜர் எஸ்கேப்.

யாதவ பிரகாசரும் அய்யங்கார், ராமானுஜரும் அய்யங்கார். அப்புறம் இவரு ஏங்க அவரை போட்டுத்தள்ள பிளான் போட்டாரு.

அதிகாரம் மற்றும் சொத்துக்கான சண்டை அண்ணன் தம்பிக்குள்ளேயே நடக்கும் போது, ஜாதிக்குள்ளேயே நடக்கிறதாங்க அதிசயம். சகோதரர் களுக்குள்ளேயே சண்டைப் போட்டுக்கறதனாலே அவுங்களுக்கு ஜாதி பாசம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

ஜெயேந்திரன் கைதின் போது ஜெயலலிதாவை கண்டித்து மாமிகள் உட்பட பிராமண சங்கம் உண்ணாவிரதம் இருந்தது. ஆனா தேர்தல் வந்த போது “அதிமுக விற்குத்தான் ஓட்டு போடணு’ம்ன்னு பிராமணர் சங்கம் தீர்மானம் போட்டுது.

‘நம்ம’ ஞாநி கூட ஜெயேந்திரனை அம்பலப்படுத்தி “தீம்தரிகிட’ இதழில் கடுமையா எழுதினாரு. ஆனால் ஆனந்த விகடன்ல ஜெயேந்திரனைப் பற்றி ஒரு கட்டுரை கூட எழுதல. சரி அது அவர் சக்திக்கு மீறின விஷயம். அதனால முடியலைன்னே, வைச்சிப்போம். ஜெயேந்திரனை தீவிரமா ஆதரிச்சி ஆனந்த விகடன் எழுதியதை கண்டித்து தனது தீம்தரிகிட இதழில் ஒரு கட்டுரை கூட எழுதல. தீம்தரிகிட இதழில் எழுதுவதையும் ஆனந்தவிகடன் கட்டுப்படுத்துமா என்ன? அதுக்குப் பேருதாங்க நெட் ஒர்க் பிசி.

சாய்பாபா கலைஞரை தேடி வந்து நேரில் சந்தித்திருக்கிறார். இது பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்த வெற்றி தானே?

திராவிட சுடர், சேலம்.

இந்த வாக்கியம் கலைஞரின் புகழ் பாடுவதற்காக தி.மு.க அல்லாத திராவிட இயக்க அறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களால் சொல்லப்படுகிறது. அதாவது தமிழக அரசு சார்பாக ஏதாவது ஒரு அமைப்பில் பத்து பேர் கொண்ட உறுப்பினராக இருப்பவர்களும், உறுப்பினராக நியமிக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களாலும் தான் சொல்லப்படுகிறது. இந்த வாக்கியத்தை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் இதில் சாய்பாபாவின் புகழும், பெருந்தன்மையும் தான் ஓங்கி நிற்கிறது.

அறிஞர்களின் நிலை ரொம்ப பரிதாபமாகத்தான் இருக்கிறது. கலைஞரை அல்ல. கேவலம் சாய்பாபாவைக் கூட விமர்சிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறது இன்றைய இவர்களது பகுத்தறிவு.

கலைஞர்சாய்பாபா சந்திப்பு, பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்த வெற்றி. சாய்பாபாவுக்கு கிடைத்ததோ ‘மாபெரும்’ வெற்றி. கடவுளா கொக்கா?

தமிழனுக்குத் தமிழன் மீது ஈடுபாடு இல்லை. தமிழனை தமிழனே மதிப்பதில்லை. என்று தான் தமிழினம் ஒன்று சேரும்?

க.தமிழ்ப்பரிதி, பெருந்துறை.

தமிழன் என்ற காரணத்திற்காகவே ஒரு நபரை ஆதரிக்க முடியுமா? இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் கூட தமிழன் தான். அவரு கூட சேர்ந்து கிட்டு பெரியார் சிலையை இடிக்கச் சொல்றீங்களா? ப.சிதம்பரம் பச்சை தமிழர் தான். ஆனாலும் அவர் நம்மவர் தான் என்கிற எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட மாட்டேங்குது. லாலு பிரசாத் இந்திக்காரர்தான். ஆனாலும் அவரு மேலே தமிழர்களுக்கு மரியாதை இருக்கத்தானே செய்யிது. ஒரு நபரை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதை தீர்மானிப்பது அரசியல், பொருளியல், சமூக காரணங்கள் தான்.

‘முல்லைப் பெரியாறு, சேலம் ரயில்வே கோட்டம், மேற்கு வங்கத்திற்கு கடல் சார் பல்கலைக் கழகம்’ மார்க்சிஸ்டுகள் தங்கள் மாநில மக்களின் நலனில் அக்கறையோடு இருக்கிறார்களே? இது பாராட்டக் கூடியதுதானே?

கல்பனா தாசன், நாங்குனேரி.

இந்த ‘அக்கறை’ மக்கள் மேல் கொண்ட அன்பினால் அல்ல, மிக மட்டரகமான ஓட்டு கட்சி அரசியலின் தந்திரம். தன் மாநில மக்களின் ஓட்டை பெறுவதற்கு இரண்டு இன மக்களிடம் கலவரத்தைத் தூண்டக்கூட இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. எந்த இன மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ, அவர்களின் சார்பாக நிற்கிறவன் தான் மார்க்சிஸ்ட். முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் ஆதரவாக தன் சொந்த மாநில மக்களையே சுட்டு வீழ்த்துகிற இவர்களுக்கா மாநில மக்கள் மீது அன்பிருக்கிறது?இவர்களா மார்க்சிஸ்டுகள்? வெட்கம்.

கன்னட பிரசாத்திற்கு தமிழ் இதழ்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவே?

சிவகுமார், திருப்பூர்.

ஒரு வேளை “தொழில்’ ஒற்றுமை காரணமோ என்னவோ? ஏன்னா இரண்டு பேருமே நடிகைகளைதான் முதலீடா வைச்சி தொழில் நடத்துகிறார்கள். தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கன்னட பிரசாத்தின் ‘தீரமிக்க’ வாழ்க்கை வரலாற்றை பத்திரிகைகள் போட்டி போட்டு வெளியிடுகின்றன. அவைகளை அவர் படிக்க நேர்ந்தால், திடுக்கிட்டிருப்பார். “இவர்கள் நம்ம “தொழிலுக்கு’ வந்தால் நம்மநெலமை அதோ கதியாகியிருக்கும். நல்லவேளை ஜெயில் தண்டனையோடு தப்பிச்சோம்’ என்று. கன்னட பிரசாத் நடிகைகளுக்கு, தொழில் அதிபர்களுக்கு, பணக்காரர்களுக்கு “மாமா வேலை’ பார்த்தார். இந்தப் பத்திரிகைகள் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கிறது.

27 சதவீத இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் படாதபாடு படுகிறதோ?

நசீர், பூந்தமல்லி.

இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் “செக்’ வைக்கும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் பெரியார், அம்பேத்கரை போல் தன்னை பாவித்துக் கொண்டு “இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்வரை ஓய மாட்டோம்’ என்று ஆவேசப்படுகின்றன.

உச்சநீதிமன்றம் எதிர்காலத்திற்கான இடஒதுக்கீட்டை கேள்விக்குட்படுத்துகிறது. மத்தியமாநில அரசுகளோ நிகழ்காலத்தில் இருக்கிற இடஒதுக்கீட்டையே காலி செய்து கொண்டிருக்கிறது. அரசு துறைகளில் மட்டும்தான் இடஒதுக்கீடு இருக்கிறது. அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதிலும், அரசு துகைளை பலவீனப்படுத்தி தனியார் துறைகளை ஊக்குவிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றன ‘சமூக நீதி’ அரசுகள். பொதுத்துறை படிப்படியாக முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து விட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 100 சதவீதம் ஒதுக்கீடு இருந்தால் கூட அதை எந்த எரவாணத்தில் கொண்டு சொருகுவது?

இதுமாதிரியான இரட்டை வேடத்தை குறிப்பதற்குத்தான் அன்றே சொன்னார்கள், “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயிலா?” என்று. (அப்போ அந்தக் காலத்திலேயே பெருமாள் கோயிலை, ராமாயணம் படித்தவர்கள் இடித்திருக்கிறார்கள்)

Advertisements
This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

3 Responses to மே 2007

  1. Pingback: இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர் « வே.மதிமாறன்

  2. Pingback: இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர் « வே.மதிமாறன்

  3. Pingback: வே.மதிமாறனிடம் கேளுங்கள் « வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s