ஜுன் 2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

தலித் எழுத்து இப்போது பரவலாக பத்திரிகைகளில் வருகிறதே?
டேவிட், திருச்சி.

தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்கள் மீது வன்முறைகள், வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகிறது.

திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிற அந்த அநீதிகளை துணிவோடு அம்பலப்படுத்தி, வன்முறை நிகழ்த்துபவர்கள் எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் அந்த ஜாதிக்காரரின் பெயரைச் சொல்லி கண்டிப்பதுதான் தலித் எழுத்து. இந்த வகை செய்திகள், எழுத்துகள் தமிழ் பத்திரிகைகளில் ஒரு single column கூட வருவதில்லை. மற்றபடி தலித்தாக பிறந்த ஒருவரிடம் கட்டுரையும், கவிதையும், கதையும் எழுதி வாங்கி ‘சிறப்பான’ முறையில் பிரசுரிப்பதற்கு தலித் மனேõபாவம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

அதற்கு பார்ப்பன மனோபாவமே போதும். ஆனந்த விகடனும், கல்கியும், காலச்சுவடும் அதைத்தானே செய்கின்றன.

சென்ற இதழில் இளையராஜாவை பற்றிய கேள்விக்கு பதில் ஒத்துக் கொள்வதுபோல் இருந்தாலும், இளையராஜாவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக காட்டும் தொனி தென்பட்டதே?
க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை. இளையராஜாவை பற்றியான விமர்சனங்களில் அவரை ஒரு கலைஞராக மதிப்பிடாத தன்மை இருப்பதையே சுட்டிக் காட்டினேன்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவராக இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை. திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பெண் பித்தனும், முழுநேர குடிகாரனும், பார்ப்பன மோகியுமான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். (மெட்டுகளை உருவிவிட்டு, கண்ணதாசன் பாடல்களை படித்துப் பாருங்கள், அது அவர் கவிதைகளை விடவும் கேவலமாக இருக்கும்) அவர்களும் இளையராஜாவின் பார்ப்பன ஆதரவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கமல்ஹாசன் போன்ற கழிசடைகளின் தீவிர ரசிகனாக இருக்கிற ஞாநி போன்றவர்கள் கூட உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் ஒப்பற்ற ஒரே கலைஞர் இளையராஜாவைத்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த மோசடிப் போக்கைத்தான் விமர்சித்தேன்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கு. அப்படியிருந்தும் அந்த நிறுவனம் பின்வாங்குவதாகவே தெரியலையே? முதலாளித்துவம் நேர்மையாகவே நடந்து கொள்ளாதா?
என்.எஸ்.சவுமியா, அரியலூர்.

ஏன் நடந்து கொள்ளாது. நேர்மையாக நடந்து கொள்வது கொள்ளை லாபம் தரும் என்றால், முதலாளிகள் நேர்மைக்கு எதிராக செயல்படுகிற யாரையும் ஒழித்து, நேர்மையை நிலைநாட்டி கொள்ளை லாபத்தை அடைவார்கள்.

சும்மாவா சொன்னார் மாமேதை மார்க்ஸ், ‘முதலாளித்துவம் தனக்கு லாபம் என்று தெரிந்தால் அது தனக்கான சவக்குழியைக் கூட தோண்டிக் கொள்ளும்’ என்று.

திரைப்படங்களில் பெரும்பாலும் வில்லன் களின் பெயர்கள் கிறிஸ்துவ, முஸ்லிம் பெயர்களே இடம் பெறுகிறதே?
இமானுவேல், கீழச்சேரி.

பிற சமயத்தவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே அதற்குக் காரணம். வைணவ இதிகாசமான ராமாயணத்தில் கூட வில்லனின் பெயர் ராவணேஸ்வரன் தான். ராமாயணத்தின்படி ராவணன் பெண் பித்தன், அரக்கன் என்பது போலவே அவன் ஒரு சிவபக்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூடகருத்துக்காகவும், திராவிடர் எதிர்ப்புக்காகவும், பெண்ணடிமைத் தனத்திற்காகவும் பெரியார் இயக்கத்தால் கடும் தாக்குதலுக்கு உள்ளானது ராமாயணம். இன்னொரு புறம் அதன் சைவ சமய எதிர்ப்புக்காக சைவ சமயத்தைச் சேர்ந்த சிவபக்தர்களான மறைமலை அடிகள், இ.மு. சுப்பிரமணிய பிள்ளை போன்றவர்களாலும் தாக்குதலுக்கு உள்ளானது ராமாயணம் (இவர்களின் ராமாயண எதிர்ப்பை பெரியார் ‘குடியரசில்’ பயன்படுத்திக் கொண்டார்). இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் மிக நல்லவரான ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே இருக்கும். அதற்கும் முன்பு திராவிட இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்த காலங்களில், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள் ‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது.

அதற்கு பின்னர் வந்த பாவமன்னிப்பு படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார். இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார். கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார். இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார்.

80களில் வந்த அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), படிக்காதவன் (நாகேஷ்) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன.

மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) காபரே நடனம் ஆடும் பெண்களும், கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள். அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை. பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த மாமிகளே.

அது சரி. மணிரத்தினம், விஜயகாந்த், அர்ஜுன், ஆர்.கே.செல்வமணி போன்ற இந்து ‘தேச பக்தர்கள்’ வில்லன்களுக்கு சிறுபான்மை மக்களின் பெயரை வைத்ததை புரிந்துகொள்ள முடிகிறது. கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகரும், இஸ்லாமியரான பாசிலும் வில்லன்களுக்கு சிறுபான்மை சமூகத்தின் பெயரை வைத்த மூடத்தனத்தை என்னவென்று சொல்வது?

பெரிய வேதனை திராவிடர் கழகம் தயாரித்த புரட்சிக்காரன் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு பார்ப்பனர். வில்லன் இஸ்லாமியர். அதாங்க பின்லேடன்.

பிரமாணர்களோடு கூட்டு வைத்த மாயாவதியின் வெற்றி எதைக் காட்டுகிறது?
க. சீதாராமன் சென்னை.

பார்ப்பனியத்தை எதிர்த்து, டாக்டர் அம்பேத்கர் வழியில் அதிகாரத்தை பிடிப்பது சிரமமானது என்பதால், பாஜக வழியை பின்பற்றி இருக்கிறார் மாயாவதி. அதனால்தான் பாஜகவின் ஓட்டு வங்கியை பெருமளவு தனதாக்கி இருக்கிறார்.

பதவி ஏற்றவுடன் சேதப்பட்டிருந்த அம்பேத்கர் மணி மண்டபத்தை புதுப்பித்திருக்கிறார். இது தலித் மக்களுக்காக செய்தது. ‘உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்று குரல் எழுப்பி இருக்கிறார். இது பார்ப்பனர்களுக்காகச் செய்தது. இப்போது சொல்லுங்கள் வெற்றி யாருக்கு? டாக்டர் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை எக்காரணம் கொண்டும் திருத்தவே கூடாது என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் ‘பார்ப்பனர்களுக்கும் இடஒதுக்கீடு’ என்று கோருகிற மாயாவதியை ஆதரிக்கிறார்கள் சிலர். இது எந்த வகையில் நியாயம்? மாயாவதியின் கோரிக்கை, அம்பேத்கர் எழுதிய சட்டத்தை அம்பேத்கரின் எதிர் நிலையில் இருந்து திருத்த வேண்டும் என்று கோருவதுதானே?

அம்பேத்கர் மணிமண்டபத்தை புதுப்பித்து விட்டு, டாக்டர் அம்பேத்கரையே சேதப்படுத்தி இருக்கிறார் மாயாவதி.

குழந்தைகளுக்காக ஜெயேந்திரரை அழைத்து கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்தியிருக்கிறார்களே? இது எதைக் காட்டுகிறது?
பாபு, காட்பாடி

‘கோடி, கோடியா கொட்டிக் கொடுத்தாக் கூட நான் ஆபாசமா நடிக்கமாட்டேன்’ என்று நடிகைகள் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பாங்க. அந்த பேட்டிக்கு பக்கத்திலேயே, ரொம்ப ஆபாசமான போஸ்ல அந்த நடிகையோட படத்தையும் போட்டுருப்பாங்க. அதுமாதிரி இருக்கு இந்த தமாசு.

ஒரு படத்துல வடிவேலு, செமத்தியா உதை வாங்கிட்டு வந்து நொந்துபோய் உட்காந்திருப்பாரு. அந்த பக்கமா போற ஆளு, வடிவேலுவோட வீரத்தைப் புகழ்ந்துட்டுப் போவாரு. அதுக்கு வடிவேலு பக்கத்துல இருக்குறவருகிட்ட சொல்லுவாரு ‘ஏன்டா, இன்னுமாடா நம்மள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?” உடனே பக்கத்துல இருக்குறவரு சொல்லுவாறு, ‘அது அவிங்க தலவிதி”.

வைரமுத்துவிற்கு பிறகு இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்களில் யார் சிறப்பாக எழுதுவதாக கருதுகிறீர்கள்?
என்.பாஷா, சேலம்.

கண்ணதாசனை மிகச் சிறந்த பாடலாசிரியராக மாற்றியவர் வைரமுத்து. வைரமுத்துவை மிகச் சிறந்த பாடலாசிரியராக மாற்றி விட்டார்கள் இன்றைய இளம் திரைப்பட பாடலாசிரியர்கள். ஆபாச பாடல்கள் எழுதிய வைரமுத்து, ஒரு குற்ற உணர்வின் காரணமாக, ‘அது என் கருத்தல்ல, என்னை என் கவிதைகளில் பார்க்க வேண்டும். பாடல் வரிகள் கதாபாத்திரத்தின் கருத்து. இயக்குநரின் எதிர்பார்ப்பு’ என்ற விளக்கமாவது கொடுத்தார்.

‘சமூகத்திற்கு எதிராக சிந்திக்கிறோமே’ என்கிற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல், சினேகன், பா.விஜய், நா.முத்துக்குமார் போன்ற பாடலாசிரியர்கள் எவ்வளவு மோசமான பாடல்களை எழுதினாலும், ரொம்பவும் ‘மிடுக்கோடு’ பேட்டித் தருகிறார்கள். இதில் முத்துக்குமாரின் இலக்கிய ரசனை அவரின் பாடல்களை விடவும், ஆபத்தானதாக இருக்கிறது. பார்ப்பனிய சிந்தனை கொண்ட சுந்தர ராமசாமி, சுஜாதா போன்ற திராவிட இயக்க எதிர்ப்பாளர்களின் எழுத்துக்களை சிலாகிக்கிறார்.

நாத்திகனாக, பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவராக, திராவிட இயக்க ஆதரவாளராக, திராவிட இயக்க பரம்பரை இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் வைரமுத்து. ஆனால் இளம் பாடலாசிரியர்களோ, ‘பிழைப்புவாதமே உத்திரவாதம்’ என்று தெளிவாக இருக்கிறார்கள். ஒரு வேளை, ‘அய்யோ இவ்வளவு ஆபாச வரிகள் வேண்டாம். கொஞ்சம் மாத்தி எழுதுங்க’ என்று பாடலாசிரியர்களிடம் இயக்குநர்கள் கேட்டுக் கொள்கிறார்களோ என்னவோ?

பின்குறிப்பு: ஜெயேந்திரர் கைதின் போது, புதிய கலாச்சாரம் இதழில் நான் எழுதிய ‘பார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ என்ற கட்டுரையில், ‘ராமனின் மனைவி சீதையின் மீது பிரியப்பட்டான் ராவணன். இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்ற பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் ஃபுல் டைம் ஒர்க் அடுத்தவர்களின் மனைவியோடு உறவு கொள்வதே” என்று எழுதி இருந்தேன். இதை பெரியார் படத்தின் பாடல் வரிகளில் தனது சிந்தனையாகவே பயன்படுத்தி இருக்கிறார் வைரமுத்து. நமக்கு மனசுக்குள்ளார வருத்தமாக இருந்தாலும், எல்லோரும் சொல்வதுபோல் நாமும் சொல்லி வைப்போம். ‘அதனால் என்னங்க கருத்து போய் சேர்ந்தா சரி’.

சென்ற இதழில் திராவிட இயக்கம் தமிழுக்கு நிறைய செய்ததாக சொன்னீர்கள். ஆனால் அவர்களின் ஆங்கில மோகத்தை மறைத்து விட்டீர்களே?
செண்பகா, வாலாசாபாத்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திராவிட இயக்கத்தின் அரசியல் நிலை பார்ப்பனியத்திற்கு, சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு. பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு’ என்ற நிலையில்தான் இருந்தது. மொழி குறித்த திராவிட இயக்கத்தின் நிலையை இதன் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். திராவிட இயக்கம் ஆங்கிலத்தை தமிழுக்கு எதிராக நிறுத்தவில்லை. சமஸ்கிருதத்திற்கு எதிராக நிறுத்தியது. இந்திக்கு எதிராக நிறுத்தியது. ஆங்கிலம் நன்கு தெரிந்த பாரதியார் போன்ற பார்ப்பனர்கள் தங்கள் ஆன்மாவை சமஸ்கிருத்தின் மேல் வைத்திருந்தது போலவே, ஆங்கிலத்தை ஆதரித்த திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் ஆன்மாவை தமிழ் மீதுதான’ வைத்திருந்தார்கள். அதனால்தான் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களையே சூட்டினர்.

சைவ சமயத்தை சேர்ந்த தமிழறிஞர்கள் சிலர் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சைவ கடவுள் பெயராக இருந்தால் போதும், அது சமஸ்கிருதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வைத்தார்கள். சமீபத்தில் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தவர்கள்கூட ஆங்கில திரைப்படத் தலைப்புகளைத்தான் எதிர்த்தார்கள். சமஸ்கிருத பட தலைப்புகளை எதிர்க்கவில்லை. பார்ப்பனரான பாரதியார் இருந்து, பார்ப்பன மனோபாவம் கொண்ட ஜெயகாந்தன் வரை சொல்வது இதைதான், ‘சமஸ்கிருதம் போற்றி வளர்க்கப் பட்டிருந்தால் ஆங்கிலம் இங்கே நுழைந்திருக்காது”.

திராவிட இயக்கத்தினர் சொன்னது இதைத்தான். ‘ஆங்கிலத்தை நுழைதாவது சமஸ்கிருதத்தை ஒழித்துக் கட்டவேண்டும்”
ஆம், இது வெறுமனே மொழிப் பிரச்சினை மட்டுமல்ல.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எப்போதும் தமிழ் அடையாளத்தோட இருக்கிறார். வெளிநாட்டுக்கு சென்றால்கூட வேட்டியிலேயே செல்கிறார்?
க. கலைசெல்வன், ஓசூர்.

அதுசரி, அவரு வேட்டிய கட்டிக்கிட்டு, இந்திய விவசாயிகளின் கோவணத்தைக் கூட உருவிடுறாரே, அதுக்கு என்ன பண்றது?

பரவாயில்லை சுபவீக்கு கலைஞர் நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறாரே?
சு.விசயன், நாகப்பட்டினம்.

இவ்வளவு காலம் சுபவீ கஷ்டப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அவர் கலைஞருக்கு மட்டும் நன்றி சொன்னால் போதாது, பொடா கைதியாக இருந்த வைகோவிற்கும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு வேளை வைகோ ஜெயலலிதாவிடம் போய் சேராமல் கலைஞருடனே இருந்திருந்தால் சுபவீக்கு இவ்வளவு ‘முக்கியத்துவம்’ கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல் பொடாவில் கைதாகியிருந்த நெடுமாறனும் திமுகவிற்கு எதிர்நிலையில் நின்றது சுபவீக்கு கூடுதல் ‘பலம்’ தான். தன்னோடு தோழமையோடு இருப்பவர்களின் பலவீனங்களை மறைமுகமாக கிண்டல் செய்வதில் கலைஞர் வல்லவர். சுபவீக்கு கொடுத்திருக்கிற கலைமாமணி விருதுகூட அப்படி உரிமையோடு கிண்டல் செய்தது மாதிரிதான் இருக்கிறது.

திராவிட இயக்க அறிவாளிகளிடமும், திமுகவிடமும் ஒரு வில்லனை போல் இருந்த ரவிக்குமார், அப்படியே தன் நிலையை குணச்சித்திர வேடத்திற்கு மாற்றிக் கொண்டார். கலைஞரைப் பற்றி கடுமையாக விமர்சித்த ரவிக்குமார், இப்போது அவருக்கான மறுப்பை அவரே எழுதிக் கொண்டிருக்கிறார்.

சும்மா சொல்லக்கூடாது, ரங்காராவ் மாதிரி குணச்சித்திர வேடத்தில் ரவிக்குமாரோட ‘பெர்ப்பாமன்ஸ்’ ரொம்ப பிரமாதம். அவருக்குக் கூட கலைமாமணி விருது கொடுத்திருக்கலாமே?

ராமர் பாலம் உண்மையா? பொய்யா?
ஏ.ரவீந்திரன், திருச்செந்தூர்.

‘ராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் மசூதியைக் கட்டி விட்டார்’ என்று சொல்வதிலும் ‘லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ராமர் கட்டிய பாலம் கடலில் மூழ்கி விட்டது’ என்று பா.ஜ.க.வும், ஜெயலலிதாவும் சொல்லுகிற இந்த கற்பனையிலும் ராமரை ஒரு சோனகிரியாக, கோழையாக, திறமையற்றவராகவே நமக்கு காட்டுகிறது.

பின்ன என்னங்க, ஒரு சாதாரண மன்னன் பாபரிடம் சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ராமன் தோத்து போயிருக்காரு.

பெரிய அவதார புருஷன் ராமன் கட்டுன பாலம், கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர் கட்டுன பாலம் மாதிரி கடல்ல மூழ்கிப் போயிருக்கு, பொண்டாட்டிய வேற ராவணன் தூக்கிட்டுப் போய்ட்டாரு. அப்புறம் எப்படிங்க இவரு கடவுளு?

Advertisements
This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s